Our Feeds


Friday, January 10, 2025

Sri Lanka

முறையாக செயற்படாவிடின் சேதன பசளை திட்டத்தின் விளைவே க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துக்கும்!


தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உரிய முறையில் செயற்படாவிடின் கோட்டபய ராஜபக்ஷவின் சேதன பசளை திட்டத்துக்கு ஏற்பட்ட கதியே  க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கும் ஏற்படும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  தரப்பினரை இலக்காகக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையில் பொறுமையுடன்  செயற்பட வேண்டும்  என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற  அமர்வில் மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுத்தேர்தல் ஊடாக நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தி  க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  பாராளுமன்றத்தை சிரமதானம் செய்ய வேண்டும் என்று மக்களிடம் குறிப்பிட்டார். நாட்டு மக்களும் பாராளுமன்றத்தை  சிரதமானம் செய்து அரசாங்கத்துக்கு  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையை வழங்கினார்கள்.

சந்தை மரத்தை போன்று பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த தேசிய மக்கள் சக்தியினர் இன்று கடந்த கால குற்றச்சாட்டுக்களை மாத்திரம் பேசுகிறார்கள். ஊடகங்கள்  உண்மையை மட்டும் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. கடந்த காலங்களில் இவர்கள் எவ்வாறு செயற்பட்டதை மறந்து விடக் கூடாது.

ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை போன்று செயற்படுகிறார்கள்.  ஊழல் மோசடி பற்றி  பேச்சளவில்  மாத்திரம் பேசிக்  கொண்டிருக்காமல் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து. மோசடி செய்யப்பட்ட நிதியை அரசுடமையாக்கி அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  அப்போதைய அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுத்தது. அந்த தீர்மானங்களை தேசிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்த்தது.  மக்கள் தமது வீட்டுக்குள் ஏழ்மையாக்கப்பட்டார்கள். இந்த நிலையில் இருந்து மீட்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் சிறந்தது. நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது. இருப்பினும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முறைமை பிழையானது.

பொருளாதார நெருக்கடியினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள   தனியார் பேரூந்து உரிமையாளர்களை இலக்காக கொண்டு க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உரிய முறையில் செயற்படாவிடின்  கோட்டபய ராஜபக்ஷவின் சேதன பசளை திட்டத்துக்கு ஏற்பட்ட கதியே  க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கும் ஏற்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »