Our Feeds


Saturday, January 25, 2025

Sri Lanka

உத்தியோகபூர்வமாக அறிவித்த மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ இல்லத்திலிருந்து வெளியேறுவார் - சாகர காரியவசம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று மேடைகளிலும் பொது இடங்களிலும் மாத்திரம் குறிப்பிடப்படுகிறது. இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தால் மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறுவார். ஒரு நாள் கூட அங்கு இருக்கமாட்டார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிள்ளைகள் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார். தமது அறிவு மற்றும் நிலைப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் அவ்வாறு பேசுகிறார்கள்.

நளிந்த ஜயதிஸ்ஸவின் பெற்றோர் அவருக்கு கல்வியை வழங்கியுள்ளார்களே தவிர அறிவை வழங்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும். 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை ஒருமுகப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆயுதமேந்தி மக்களை கொன்ற அனுபவம் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு இருக்கலாம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் பிள்ளைகளுக்கு அவ்வாறு அனுபவம் கிடையாது. ஆகவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு படைகள் அவசியம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டின் பெறுமதியை குறிப்பிடும் ஜனாதிபதி அவர் வசிக்கும் ஜனாதிபதி மாளிகையின் பெறுமதியையும் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அரிசி, தேங்காய் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி முதல் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் சிறுபிள்ளைத்தனமான கருத்தை மாத்திரமே குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று மேடைகளிலும், பொது இடங்களிலும் மாத்திரம் குறிப்பிடப்படுகிறது. இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தால் மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறுவார். ஒரு நாள் கூட அங்கு இருக்கமாட்டார் என்று உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »