Our Feeds


Tuesday, January 14, 2025

SHAHNI RAMEES

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை - நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

 


நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென

யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார்.


அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களிடத்தில் கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கும் முகமாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஏற்கனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள்.


இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.


அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன்.


அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.


அதேநேரம், குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும் அவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »