Our Feeds


Sunday, January 5, 2025

SHAHNI RAMEES

அகதிகளாக எல்லோரும் வர முற்பட்டால் இலங்கைக்கு பாரிய நெருக்கடி ஏற்படும். - அரசாங்கம்

 


முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து

வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் விடயத்தில் நீதிமன்றத்தின் தீரப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அகதிகள் நாட்டில் தங்கியிருக்கும் வரை தேவையான உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவித்த கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எவ்வாறாயினும் ரோஹிங்கியா அகதிகளை தொடர்ந்தும் நாட்டில் வைத்திருக்க தீர்மானத்தில் அதற்கு பின்னர் ஏற்பட கூடிய விளைவுகள் குறித்து அவதானம் செலுத்த வேணடும் எனவும் குறிப்பிட்டார்.


இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,


முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகள் நாட்டில் தங்க வைத்திருக்கும் வரையில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.


ரோஹிங்கியா அகதிகளை நிரந்தரமாக நாட்டில் வைத்துக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்கு தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்கப்படும். எவ்வாறாயினும் இலங்கையின் தீர்மானத்துக்கு அமைவாகவே ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புகள் எமக்கு கிடைக்கும்.


எவ்வாறாயினும் ரோஹிங்கியா அகதிகளை தொடர்ந்தும் நாட்டில் வைத்திருக்க தீர்மானத்தில் அதற்கு பின்னர் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அவதானம் செலுத்த வேணடும்.


ஏனெனில் அகதிகளாக எல்லோரும் இலங்கைக்கு வர முற்படுவார்கள். இதனால் பொருளாதார ரீதியிலும் ஏனைய வகையிலும் ஏற்பட கூடிய நெருக்கடிகள் பாரதூரமானதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவது யதாரத்தமானது என கூறினார்.  


எவ்வாறாயினும் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தகவல்கள் மேலும் குறிப்பிட்டன.


கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ரோஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச் சென்ற படகு முல்லைத்தீவில் - முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியது.


இவர்கள் அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 12 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். மீதமுள்ள ரோஹிங்கியா அகதிகளை மிரிஹானை குடிவரவு தடுப்பு மையத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. இருப்பினும், பின்னர் அவர்கள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 103 ரோஹிங்கியா முஸ்லிம்களை இன்னும் அகதிகளாக வகைப்படுத்தாது, ஒழுங்கற்ற குடியேறிகளாகக் கருதப்படுகிறார்கள். இது குறித்து விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே குறிப்பிடுகையில்,


முல்லைத்தீவு விமானப்படை முகாமில் 103 ரோஹிங்கியா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.


குடிவரவு - குடியகல்வு தினைக்களம் இந்த இந்த அகதிகள் குறித்து தீர்மானங்களை எடுக்கும். ஒரு கரப்பிணிப் பெண் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை விமானப்படை பராமரித்து வருகிறது.


அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவுகள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களின் செலவிணங்களை குடிவரவு - குடியல்வு தினைக்களம் செய்கிறது. தினைக்களம் வழங்கும் பட்டியலுக்கு அமைய உணவை நாங்கள் வழங்குகின்றோம் என கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »