Our Feeds


Saturday, January 4, 2025

Zameera

மாணவர்களின் அசௌகரியங்களை குறைக்க உடனடி நடவடிக்கை - பிரதமர்


 பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்வியலாளர்களின் கல்வியைப் பாதிக்கும் அனைத்து வெற்றிடங்களையும் ஆராய்ந்து தேவைக்கமைய அவற்றை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும், கடந்த வருடங்களில் உயர் கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்பாட்டிற்கு எடுக்கப்படவில்லை இதனால், வருடாந்த மதிப்பிடுகளை தயாரிக்கும் போது அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

‘வெளிநாட்டு கடன் நிவாரணத்தின் கீழ் இந்த நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற நிதியைக் கொண்டு சரியான முறையில் பணிகளை மேற்கொண்டிருந்தால் எமது பல்கலைக்கழகங்களை கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்பர்ட் தரத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும்.

எனினும் சரியான முறையில் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கமைய வேலைத்திட்டங்களை தயாரிக்க தவறியதால், நிதி வீண்விரயம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் தனியார் கல்விக்கென உரிய கொள்கையொன்றும் நாட்டிற்கு தேவைப்படுகிறது.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஆணைக்குழு வழங்கும் அனுமதியை முறைகேடாக பயன்படுத்தும் வகையில் சில நிறுவனங்கள் செயற்படுவதாக’ இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பாலின அடிப்படையிலான துன்புறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும், பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளுதல் மற்றும் பட்டத்தைப் பெறும் போது இடம்பெறும் காலதாமதத்தை தவிர்ப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ, பேராதனை உள்ளிட்ட பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல், விடுதி வசதிகளை அபிவிருத்தி செய்தல், மாணவ நலன்புரி விடயங்கள், பயிற்சி சந்தர்ப்பங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »