சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் வழங்கப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்ட் எண் 3 இல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்ட கைதிகளும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுள்ள நிலையில், நிலைமையை மதிப்பிடுவதற்கு மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பேச்சாளர் தெரிவித்தார்.
துமிந்த சில்வா உட்பட சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட வசதிகளை வழங்கி வருவதாக கைதிகளின் உரிமைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கூற்றுக்களை சிறைச்சாலை பேச்சாளர் கடுமையாக நிராகரித்தார், சிறப்பு வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளதோடு, துமிந்தவுக்கு தனியான மலசலகூடம் அல்லது வேறு எந்த விசேட சிகிச்சையும் வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்திய இரண்டு ஆரம்ப விசாரணைகள் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.