எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின்
சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.மஹரகம ஜனாதிபதி கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலங்கை நிபுணத்துவ அதிபர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் தீர்க்கப்படாத 35 கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையும் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஆசிரியர்களின் போராட்டத்தினால் பெருமளவிலான ஆசிரியர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்ததாகவும், அதன் பலனாக மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தற்போதைய ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், தூய்மை இலங்கை வேலைத்திட்டம் பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டார்.
அத்துடன், அரசாங்கம் ஊடகங்களை நசுக்குவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும், தமது அரசாங்கம் ஊடகங்களை மிகச் சிறப்பாகக் கையாள்வதாகவும், தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இங்கு குறிப்பிட்டார்.
ஊடகங்கள் அரசாங்கத்தின் எந்தவொரு நல்ல செயற்பாட்டையும் காட்டாது பிழைகளையும் குறைபாடுகளையும் மட்டுமே காட்டுவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பஸ், ஆட்டோ பிரச்சினை, அரிசி பிரச்சினை போன்ற சிறு சம்பவங்களை வைத்து தற்போதைய ஆட்சியை அளவிடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு சமூக வலைதளங்களில் அடிக்கடி நேரலையில் வருவேன் என்றும், தற்போது ஆட்சியமைப்பதால் அப்படி வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.