Our Feeds


Friday, January 3, 2025

Zameera

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும்


 எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். இதற்காகத் தேவைப்படும் மனிதவளமானது உருவாகும் பிரதான இடமே கல்வியாகும். இதனால் கல்வித் துறையில் பாரிய பரிணாமத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாணக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனவரி 02ம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
‘இவ்வாறானதொரு பரிணாமம் இடம்பெறும்போது கட்டாயம் நாம் ஒன்றிணைந்து, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.இல்லையெனில் இங்கு நெருக்கடி ஏற்படுவதற்கு இடமுள்ளது. கல்வி என்பது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு தலைப்பாகும்.

பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் பொதுவான கல்வி முறைமையொன்று காணப்படுதல் வேண்டும். மாகாணங்களுக்கிடையில் பல்வேறு தேவைகள் காணப்பட்ட போதிலும், கொள்கைகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனினும் கொள்கை மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய மட்டத்திலான கொள்கைகளுக்கமைய பணியாற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்படுகிறது.

பிள்ளைகளின் கல்வித் தேவைகள், போசாக்கு வேலைத்திட்டங்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை, தொழிற்துறை மட்டத்திலான ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டங்களின் தேவை போன்ற துறைகளில் மாகாண மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »