தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெறும் வாய்ப்பேச்சு வீறாப்பி னூடாகவே ஆட்சி செய்து வருகிறது. ஏதாவதொன்றை அடிப்படையாகக் கொண்டு வீறாப்பு பேசி, பழைய விடயங்களை மறந்து விடுகிறார்கள்.
சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகொடுக்காமல் வெறும் வாய்ப்பேச்சு வீறாப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தால் இந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு தொடருமென்று எதிர்பார்க்க முடியாது” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
மேலும், டிஜிட்டல் அடையாள அட்டைக்கான கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பை இந்திய நிறுவனத்துக்கு ஒப்படைக்கும் யோசனையை நிராகரித்துவிட்டு அதனை இலங்கையிலுள்ள நம்பிக்கைக்குரிய நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் ஒவ்வொரு நாடுகளிலும் நீண்ட கருத்தாடல்கள் இருந்தாலும், சகல நாடுகளிலும் இந்த முறை நடைமுறையில் இல்லை. ஐக்கிய இராச்சியத்தில் கூட ஒருசில மாநிலங்களில் மாத்திரமே இந்த டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறையில் இருக்கிறது. ஐக்கிய இராச்சியத்திலும் இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றபோதும் அதனை அறிமுகப்படுத்தவில்லை.
தற்போதைய ஜனாதிபதி அண்மையில், உலகில் அதிக பாதுகாப்புக்கொண்ட டிஜிட்டல் மயமாக்கம் இந்தியாவிலேயே இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால், டார்க் இணையத்தினூடாக இந்தியர்கள் 815 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமொன்று தகவல் வெளியிட்டிருந்தது. இவ்வாறு திருடப்படும் தரவுகளை அவர்கள் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வார்கள். எனவே, தற்போது நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை முறை நீக்கப்படவேண்டும்.
நாட்டுக்கு போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ரோஹிங்யா போன்ற அகதிகள் நாட்டுக்கு வரும்போது அவர்களும் இதுபோன்று போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தவும் முடியும்.
அதேபோன்று வேலைவாய்ப்புக்காக அண்டை நாடுகளைச் சேர்ந்த நபர்களும் இலங்கைக்கு வருகிறார்கள். ஒருபுறம் இந்தியாவுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டறிக்கையின் பிரகாரம் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அவ்வாறு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டால் இந்தியாவிலுள்ளவர்கள் இங்கு வேலைவாய்ப்புக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது. இலட்சத்தையும் தாண்டி கோடிக்கணக்கானவர்கள் இங்கு வரக்கூடும்.
எனவே, அவ்வாறு வரும் இலங்கையர்களுக்கும் இவ்வாறான போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டால் இலங்கையின் மக்கள் தொகை எந்தளவு திரிபுபடுத்தப்படும் என்பது குறித்து சந்தேகத்தை வெளியிடவும் முடியும்.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதானிகள் அறிந்தே இந்த போலி அடையாள அட்டைகள் வெளியிடப்படலாம். அதனால், இந்தியா அல்லது வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் போலி அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே ஆட்பதிவுத் திணைக்களம் செயற்பாடுகளை திட்டமிட்டுள்ளது.
அதனால், இவ்வாறு போலி அடையாள அட்டையை வெளியிடும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று டார்க் இணையங்களினால் 815 மில்லியன் பேரின் தனியார் தரவுகளை திருட முடியுமென்றால், அந்தத் தரவுகளை விற்பனை செய்ய முடியுமென்றால், இலங்கைக்கான டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பை இந்திய நிறுவனத்துக்கு வழங்கினால் இங்குள்ள தரவுகளை எவ்வாறு விற்பனைசெய்வார்கள் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
எமக்கு கிடைத்துள்ள தகவலுக்கமைய, டிஜிட்டல் அடையாள அட்டை முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவது மாத்திரமல்லாமல் அதனை இந்திய நிறுவனத்துக்கு வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேறு சில நாடுகளிலும் டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான கட்டமைப்பு செயற்பாடுகள் அந்த நாடுகளிலுள்ள உள்நாடுகளிலுள்ள நிறுவனங்களினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. வேறு நாடுகளுக்கு பொறுப்பளிக்கப்படவில்லை.
எனவே, இந்த நவீன உலகில் தரவு என்பது மிக முக்கியமானதாகும். ஒரு புறத்தில் போலி அடையாள அட்டை தயாரிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதேபோன்று டிஜிட்டல் தரவு கட்டமைப்பை உருவாக்குதென்றால் இந்தியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்காமல் நாட்டிலுள்ள பொறுப்பு வாய்ந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். தரவு பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்.
டிஜிட்டல் அடையாள அட்டை நாட்டுக்கு அவசியமில்லை என்பது எங்களின் நிலைப்பாடு இல்லை. இந்த செயற்பாட்டை இந்திய நிறுவனத்தினூடாக முன்னெடுக்க முயற்சித்தால் இங்குள்ள தரவுகள் அவர்களின் வசமாவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. அவர்களுக்கு ஏற்ற அந்த தகவல்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தவும் முடியாது.
இதேவேளை, இந்த அரசாங்கம் கதைபேசும் ஆட்சியையே முன்னெடுத்து வருகிறது என்றே நான் கருதுகிறேன். ஆட்சிக்கு வந்ததிலிருந்து தாம் எதிர்க்கட்சியில் இருப்பதாக கருதிக்கொண்டே செயற்பட்டு வருகிறார்கள். ஏதாவதொன்றை அடிப்படையாகக் கொண்டு கதைபேசுவார்கள். பின்னர் அதனை மாத்திரம் பிடித்துக்கொண்டு பழைய விடயங்களை மறந்துவிடுகிறார்கள். எட்கா உடன்படிக்கையும் அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளையும் மறந்துவிட்டார்கள்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் ஆபத்தான நிலையிலும் யுத்தத்தை நிறைவு செய்வதற்காக அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர். அவ்வாறானவொருவருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது. எனவே, வெறும் கதை பேசிக்கொண்டிருக்காமல் நாட்டிலுள்ள சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வாய்ப்பேச்சு வீறாப்பினால் இந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு தொடருமென்று எதிர்பார்க்க முடியாது’’ என்றார்.
Thursday, January 23, 2025
வாய்ப்பேச்சில் அரசியல் செய்கிறார் அநுர!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »