Our Feeds


Tuesday, January 21, 2025

Zameera

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற தயார்


 இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல, அவை உரிமைகளாகும்.

எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற நாம் தயாராகவே உள்ளோம். காரணம் இது எமது சொந்த குடியிருப்பு அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.

உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளவையாகும்.

எவ்வாறிருப்பினும் அந்த இல்லத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யாருக்காவது விற்க வேண்டிய தேவை இருந்தால், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

காரணம் அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாக பெற்றுக் கொண்டதல்ல. அரசியலமைப்பு ரீதியாக கிடைக்கப் பெற்றதாகும். இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி, சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொறுந்தும்.

முன்னாள் அரச தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பழிவாங்கப்படுகின்றனரா இல்லையா என்பது ஜனாதிபதி அநுரவின் உரைகளிலும், செயற்பாடுகளிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல. அது உரிமையாகும். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பல நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.

எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எது எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »