'சிறுபான்மை இனம்' என்ற சொல்லுக்குப் பதிலாக “சகோதர இனம்”
அல்லது வேறு ஏதும் ஒரு பொருத்தமான சொல்லைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட சர்வமத அமைப்பு மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வேண்டுகோள் விடுத்துள்ளது.கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் செயலாளர் காமினி ஜயவீர எழுத்து மூலம் விடுத்துள்ள நீண்ட வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமது அமைப்பு நீண்டகாலமாக இனங்களுக்கிடையே சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்துவது தொடர்பாக இயங்கி வருவதாகவும் அதன் அடிப்படையிலே இதனை வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை எனும்போது இயல்பாகவே தாம் சிறியவர்களாக தாழ்த்தப்படும் மனோ நிலை ஏற்படுவதாகவும் அதேநேரம் பெரும்பான்மை எனும்போது அது குறிப்பிட்ட ஒரு சாராரை உயர்த்தி மதிப்பிடும் ஒரு மனோபாவத்தையும் ஏற்படுத்துவதாகும்.
எனவே, சிறுபான்மை என்ற பதம் பொதுவான இடங்களில் பயன்படுத்தப்படுவதற்குப் பதில் மாற்றீடான ஒரு சொல் பயன் படுத்தப்படுவது இன ஒற்றுமைக்கு நல்லது எனவும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சகோதர இனம் என்ற சொல்லையே தமது அமைப்பு பயன் படுத்துவதாகவும் இதனை பரவலாக்குவது நல்லதென தமது அமைப்பு கருதுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இலங்கையில் தமிழ், முஸ்லிம் இனங்களை 'சிறுபான்மை' என்ற சொல் கொண்டு அழைப்பதால் அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கப்படுவதாகவும் ஆனால் அவர்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்பதால் அதற்குப் பொருத்தமான ஒரு பதத்தை அறிமுகம் செய்யும்படியும் சகோதர இனம் என்பது பொருத்தம் போலிருப்பின், அது தொடர்பாக சமூகத்தில் ஒரு கருத்துப் பறிமாற்றத்தை ஏற்படுத்தும் படியும் அவர் கேட்டுள்ளார். இது தெடர்பக மனித உரிமைகள் ஆணைக்குழுவுன் கவணத்தை ஈர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.