பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,
அண்மையில் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவில் கரையொதுங்கி, திருமலையில் வைக்கப்பட்டிருந்தபோது, நான் அவர்களை பார்வையிட சென்றிருந்தேன். அவர்களுடன் கலந்துரையாடுவதை பொலிஸார் தடுத்து, எமக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது. 3 இலட்ச அகதிகளுக்கு, அரசாங்கத்தின் உதவியுடன், பல மாதங்கள் மூன்றுவேளை உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டேன்.
எனவே, ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை மன வருத்தத்தை தோற்றுவித்தது. படுப்பதற்கு பாய், தலையணை கூட அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நான் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்தேன்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எங்களுடன் இரண்டு தசாப்தகாலமாக இந்த பாராளுமன்றில் இருந்தவர் என்ற வகையில், அவரது நற்பண்புகளை கண்டிருக்கின்றோம். அவரது பேச்சு மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொண்டுதான், மூவின மக்களும் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு எமது நாட்டுக்கு அகதிகள் வருகின்றபோது, சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அந்தவகையில், இந்த மியன்மார் அகதிகள் விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுங்கள்.
மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
அதுபோலவே, எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.
எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர். எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள்.
மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்தார்.