Our Feeds


Thursday, January 2, 2025

Zameera

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


 எல்லை தாண்டி வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப் பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட போது கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி  வடமராட்சி கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் 12 காரைக்கால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு நவம்பர் 13 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் நீரியல்வளத் துறை அதிகாரிகளினால் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த கைதின் போது கடற்படை அதிகாரிகளைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் படகிற்கு சேதம் ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில் கடற்படையினரால், பருத்தித்துறை காவல் நிலையத்தில் பிறிதொரு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கடற்படையினரைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை காவல்த்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகவே இந்திய மீனவர்கள் மீதான குற்றப் பத்திரத்தினை தாக்கல் செய்யுமாறு நீதவான் பருத்தித்துறை காவல்த்துறையினருக்கு பணித்துள்ளதுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே எதிர்வரும் 8 ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலைசனைக்கு அமைய பருத்தித்துறை பொலிஸாரால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »