Our Feeds


Thursday, January 16, 2025

SHAHNI RAMEES

இதற்க்கு தான் அனுபவமுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்புமாறு திரும்பத் திரும்ப கூறினோம்! - வஜிர

 


அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு

பதிலாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிப்பதில்லை. 


ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன் மூலம் நாட்டில் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


காலியில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (15)  கட்சி ஆதரவாளர்ளை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 


நாடு செல்லும் போக்கில் எதிர்காலத்தில் நாட்டுக்கு என்ன நிலைமை ஏற்படும் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அதுதொடர்பில் நான் தெரிவிக்க தேவையில்லை. 


நாடு எந்த திசைக்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை ஏற்படும் என்பதை அறிந்தே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுபவமுள்ளவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு திரும்பத் திரும்ப தெரிவித்து வந்தார். 


ஆனால் எமது நாட்டு மக்கள் அனுபவமுள்ளவர்களை நிராகரித்துவிட்டு, நாட்டின் பொறுப்பை அனுபவமற்றவர்களுக்கு வழங்கினார்கள்.


இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு பாெங்கல் சமைக்க அரிசி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு தெரிந்தளவில் இவ்வாறானதொரு நிலைமை இந்த முறையே ஏற்பட்டுள்ளது.


 சில இடங்களில் பச்சை அரிசி ஒரு கிலாே 400ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரணில் விக்ரமசிங்க இலவசமாக அரிசி வழங்கியதாலே அரசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து புதுமையாக இருக்கிறது. அப்படியானால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் அதனாலா என கேட்கிறோம். 


இந்த கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லாமல்போகும் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு குறை கூறுகிறார்கள்.


மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு வழங்குவதாக தெரிவித்தே அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் பிரச்சினைகளை மேலும் உருவாக்கி வருகிறார்கள். 


அரிசி இலவசமாக வழங்கியதாலே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பது, அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காகும்.


அரிசி மாத்திரமல்ல ஒட்டுமொத்த விவசாய தொழிற்சாலைகளும் இன்று பாரிய சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கின்றன. 


ஆனால் இன்று நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இருந்திருந்தால். இந்த பிரச்சினைகள் எதுவும் இருந்திருக்காது.


மேலும் வரவு செலவு திட்டத்தை கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே சமர்ப்பிக்க இருந்தது. ஆனால் அதனை சமர்ப்பிக்க 3மாதங்கள் வரை தாமதமாகி இருக்கிறது. 


இந்த தாமதிப்புடன் ஏற்படும் நிதி கையாளும் செயற்பாட்டில் ஏற்படுகின்ற நட்டத்தை தவிர்ப்பது இலகுவான விடயமல்ல. 


இந்த வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதத்தில் சமர்ப்பித்து சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட தவணையை டிசம்பர் மாதளவில் பெற்றுக்கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்லவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வந்தார். 


தற்போதே பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. இது நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு கொண்டு செல்லும் நிலையாகும்.


அதனால் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு குறைகூறி பயனில்லை. அவர்கள் அதிகாரத்துக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ளன. ஆனால் பிரச்சினைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதாக தெரியவில்லை. 


நாடு இன்னும் பொருளாதார பொருளாதார நெருக்கடி நிலையிலேயே இருப்பதாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் தெரிவித்திருந்தார். 


அதனால் மிகவும் அவதானமாகவே நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். என்றாலும் மக்கள் அந்த விடயங்களை நம்பாமல், அனுபவமில்லாதவர்களுக்கு நாட்டின் பொறுப்பை பெற்றுக்கொடுத்தார்கள்.


 எனவே அரசாங்கம்  ரணில் விக்ரமசிங்க மீது குறைகுறி வருவதனால், நாட்டின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.


  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »