Our Feeds


Thursday, January 23, 2025

Sri Lanka

அரசாங்கம் கோத்தபாயவின் முஸ்லிம் விரோத வழியில் பயணிக்கிறதா?



அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் போதும் அரசிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. - இம்ரான் எம்.பி


அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முஸ்லிம்கள் புறக்கணிப்பு விடயத்தில் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம் பேசுபொருளாகியுள்ளது. சிரேஸ்டத்துவ அடிப்படையில் முன்னிலையிலிருந்த ஒருவரை விடுத்து புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

விடப்பட்டவர் முஸ்லிம். இவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக விடப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீதித்துறை நியமனங்களில் கூட முஸ்லிம் சமுகத்திற்கு நீதியில்லை என்றால் இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எப்படி நியாயமான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியும் என்று கேட்க விரும்புகிறேன்.

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அடுத்தடுத்து பறக்கணிக்கப்படுகின்ற போதிலும் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவை குறித்து இதுவரை எதுவும் பேசாது மௌனம் காப்பது முஸ்லிம் சமுகத்தில் பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்து இப்போது பேசுகின்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்குதல் மற்றும் ஏற்றாத்தாழ்வுகளை ஒழித்தல் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இதுபோன்ற புறக்கணிப்பு செயற்பாடுகளை பார்க்கும் போது எங்கே சம உரிமை உள்ளது. எப்படி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. எந்தத் திட்டமும் கடதாசியில் இருக்கலாம். அது வாசிப்பதற்கு திருப்தியாகத்தான் இருக்கும். நடைமுறையில் அது இல்லை என்றால் அதனால் என்ன பயன் ஏற்படும்.

எனவே, இந்த அரசாங்கமும் கோத்தாபாயவின் முஸ்லிம் விரோத வழியில் பயணிப்பதான சந்தேகமே இப்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »