பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் அதிசொகுசு வாகனங்கள் வழங்கப்பட மாட்டாது. மக்கள் மீது சுமைகளை சுமத்தாத வகையில் பதவி காலத்துக்கு மாத்திரம் வாகனங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது. வாகன இருப்பொன்றைப் பேணி, அதன் மூலம் வாகனமொன்றை வழங்கவே எதிர்பார்த்துள்ளோம்.
அதற்கமைய தமது பதவி காலம் நிறைவடைந்த பின்னர் அவற்றைப் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சிடம் கையளித்துச் செல்ல முடியும்.
எவ்வாறிருப்பினும் இதுவரை வாகன இருப்பொன்றை உருவாக்கிக் கொள்ள முடியாதுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லது திணைக்களங்களின் தலைவர் அதிசொகுசு வாகனங்களையே பயன்படுத்தியிருக்கின்றனர்.
அந்த அனைத்து வாகனங்களை மீளப் பெற்று திறைசேரிக்கு பொறுப்பாக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய மக்கள் மீது சுமையை சுமத்தும் வகையில் எவருக்கும் சொகுசு வாகனங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றார்.
(எம்.மனோசித்ரா)