Our Feeds


Wednesday, January 15, 2025

Zameera

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு


 இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ​​பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.

நீதியரசர்கள் குழாம் உரிய வகையில் அமைக்கப்படாததால், அடுத்த வழக்கு விசாரணையின் போது இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதியரசர், சட்டத்தரணியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த மனு எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »