Our Feeds


Saturday, January 11, 2025

Zameera

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவை பெரமுன வழங்கும்


 நீண்டகாலமாகத் தீர்க்கப்பட முடியாமல் தொடரும் மலையக மக்களின் அடிப்படைச் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு கட்சியும் முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது முழு ஆதரவையும் வழங்குமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


“எமது ஆட்சிக் காலத்தில் நாம் மலையக மக்களைக் கைவிடவில்லை. அன்றையபொழுதில் அம்மக்களுக்குத் தேவையான சம்பள உயர்வை முடிந்தளவு பெற்றுக் கொடுத்தோம். ஆனால், இன்றைய ஆட்சியாளர்களினால் அம்மக்களின் அடிப்படைச் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவித நகர்வையும் மேற்கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும், இச்சம்பளப் பிரச்சினை தொடர்பில் எந்தக் கட்சியேனும் ஆக்கபூர்வமான முன்னகர்வைக் கொண்டுவந்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்” என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


“அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்குரிய இலகுநிலையை கம்பனிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இலங்கைத் தேயிலைக்கான கேள்வியை உலகளாவிய ரீதியில் அதிகரிப்பதற்கான சூழ்நிலையை கம்பனிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். ஆகையால், இந்த விடயம் தொடர்பிலும் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »