Our Feeds


Wednesday, January 1, 2025

Zameera

முன்னாள் அமைச்சர் மனுஷவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!


 முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


இலஞ்ச மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷாரவினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் போது, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் பெற்றிருக்கலாம் என்பதால் அவரது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டைக் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஜாமுனி கமந்த துஷார, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்து பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரது வங்கிக் கணக்கிலிருந்து 27 கோடி ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மனுஷ நாணயக்கார தற்போது வெளிநாடொன்றில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அவரை நாட்டுக்கு வரவழைத்து அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலஞ்ச மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷார மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »