Our Feeds


Sunday, January 19, 2025

SHAHNI RAMEES

20 சதவீத மின்கட்டண குறைப்பு நடைமுறை ஆகாவிட்டால், நாட்டு மக்கள் மின்சாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம்! - சம்பிக்க

 

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்த 20 சதவீத மின்கட்டண குறைப்பை முறையாக அமுல்படுத்த வேண்டும். சட்டத்தின் பிரகாரமே   ஆணைக்குழு மின்கட்டணத்தை குறைத்துள்ளது. ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட விதத்தில் தான் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் செயற்படுகிறது. தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டணத்தை குறைக்குமாறு யோசனை முன்வைத்தோம்.இதற்கமைய மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

மின்கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் குறித்து நிதியமைச்சின் ஆலோசனைகளை பெற வேண்டும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது. அல்லது சட்டமா அதிபரின் ஆலோசனை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க சட்டத்தின் பிரகாரம் செயற்பட்ட போது அப்போதைய அரசாங்கம் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி அவரை பதவி நீக்கியது.

இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.

மின்கட்டணத்தை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது என்று மின்சாரத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். 33 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் மின்சார சபை குறிப்பிடும் தரவுகள் முற்றிலும் பொய்யானது.மின்சார சபையின் வருமானம் குறித்து கணக்காய்வு செய்தால் உண்மையை அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பொய்யுரைக்காமல் கணக்காய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பதிலளிக்குமாறு மின்சாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துகிறோம்.

மின்சார சபை கடந்த ஆண்டு மின்கட்டண திருத்தம் தொடர்பில் யோசனை முன்வைக்கும் போது பாரியளவில் கட்டணத்தை குறைக்க முடியாது. 3.34 சதவீதத்தால் கட்டணத்தை குறைக்க முடியும். ஏனெனில்மின்னுற்பத்திக்கான செலவு அதிகளவில் காணப்படுவதாக முன்மொழிவுகளை முன்வைத்தது. இது முற்றிலும் பொய் என்பதை தரவு அடிப்படையில் வெளிப்படுத்தினோம்.

மின்சார சபை 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 63 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. இதனை நாங்கள் வெளிப்படுத்தினோம்.இதன் பின்னரே மின்கட்டணம்  22 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை குறிப்பிட்டது. பின்னர் மின்னுற்பத்திக்கான உண்மை செலவுகளை ஆராய்ந்ததன் பின்னர் மின்கட்டண குறைப்புக்கு மின்சார சபை இணக்கம் தெரிவித்தது. இதற்கமைவாக தரவுகளை மீளாய்வு செய்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைத்துள்ளது.

மின்பாவனையாளர்களின் பக்கம் இருந்து ஆணைக்குழு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மின்கட்டண குறைப்பை முறையாக அமுல்படுத்த வேண்டும்.சட்டத்தின் பிரகாரமே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்கட்டணத்தை குறைத்துள்ளது. ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்  சீன விஜயத்தில் புதிதாக எவ்வித கருத்திட்டங்களும் புதிதாக இலங்கைக்கு கிடைக்கவில்லை. கடந்த கால கருத்திட்டங்களே கிடைக்கப் பெற்றுள்ளன.2011 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டை பகுதியில் துறைமுகம் நிர்மாணிக்கும் போது துறைமுகத்தை அண்மித்த பகுதியில் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு கைத்தொழில் பேட்டைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் முதல் காலப்பகுதியில் நாங்கள் சீனாவுக்கு சென்றிருந்தோம். 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.கடந்த அரசாங்கமும் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.ஆகவே இதுவொன்றும் புதிதல்ல என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »