Our Feeds


Saturday, January 18, 2025

Zameera

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்


 19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன.

 2023 ஆம் ஆண்டு அறிமுகமான 19 வயதுக்கு உட்பட்ட அணிகள் ஆடும் இந்தத் தொடரில் இலங்கை உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் இந்திய அணி நடப்புச் சாம்பியன்களாகவே இம்முறை தொடரில் பற்கேற்கவுள்ளனர்.

ஆரம்ப சுற்றில் 16 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆடவுள்ளன. இதன்படி இன்று முதல் நாளில் மொத்தம் ஆறு போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து இளையோர் அணி நாளை அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இதில் மனுஷி நாணயக்கார தலைமையில் பங்கேற்கும் இலங்கை அணி ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குழுவில் நடப்புச் சாம்பியன் இந்தியா, போட்டியை நடத்தும் மலேசியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை இளையோர் அணி உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது. கோலாலம்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். தொடர்ந்து இலங்கை அணி எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதிக்கு மேற்கிந்திய தீவுகளையும் ஜனவரி 23 ஆம் திகதி இந்திய அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.

16 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் ஆரம்பச் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக இடம்பெறும் இந்த சுற்றில் இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இளையோர் மகளிர் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »