கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட
38 வேட்பாளர்களில், செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 12 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறான செலவு அறிக்கைகளை வழங்காத 07 வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 5 வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த வாரத்திற்குள் வழக்கு தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குமாறு வேட்பாளர்களுக்கு எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் பல தடவைகள் தெரிவித்தும், அதில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தால் ஒரு வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி, அவர் தேர்தலில் வேட்புமனு கோர அனுமதிக்கப்பட மாட்டார் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.