உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 12 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கும்பமேளாவின் முக்கியமான புனித நாளான நேற்று அதிக பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள கூட்ட நெரிசல் காரணமாகவே இந்த ஆபத்து நிகழ்ந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதிலும், ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடும் மௌனி அமாவாசை தினமான நேற்று கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் மட்டும் அங்கே சுமார் 10 கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படியே, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.