Our Feeds


Monday, December 30, 2024

Sri Lanka

மனுஷவின் சகோதரருக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் தகவல் கோரும் காவல்துறை!


வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் அந்தத் திணைக்களம் வழங்கியுள்ளது.

அதன்படி 0112 337 219 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு குறித்த தகவல்களை வழங்க முடியும்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் அவரின் கணக்கில் 27 கோடி ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்கார நேற்று முன்தினம் பிபிலை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் நபரொருவரிடம் 40 இலட்சம் ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார்.

அதில் தாம் 30 இலட்சம் ரூபாவை திசர நாணயக்காரவிடம் வழங்கியுள்ளதாகவும், பின்லாந்தில் தொழில் எதனையும் பெறவில்லை எனவும், முறைப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த நபர் தலா 15 இலட்சம் ரூபா வீதம் இரண்டு தடவைகளில் 30 இலட்சம் ரூபாவை சந்தேகநபரின் கணக்கில் வரவு வைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன்படி சந்தேகநபரின் வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »