சபைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் முன்னாள் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில்சார் அடைமொழிகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமென சர்வசன அதிகார கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று (17) இடம்பெற்ற புதிய சபாநாயகர் நியமனத்தின் பின்னர், சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேவேளை, புதிய சபாநாயகரால் சுயாதீனமாக செயற்பட்டு சபையின் கௌரவத்தை பாதுகாக்க கூடியதாக இருக்குமென நம்புகிறேன். அதேபோல் நீண்ட காலம் இருந்து வந்த பாராளுமன்ற சம்பிராதயங்களை பாதுகாக்க கூடியதாக இருக்குமெனவும் நம்புகிறேன்.
இருந்த போதும், இந்த பிரச்சினை தோற்றம் பெற்ற விதம், பின்னணி என்பவற்றையும் கருத்திற்கொண்டும் ஏனைய விடயங்களையும் கருத்திற் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களின் முன்னால் இருக்கும் கலாநிதி, பேராசிரியர், வைத்தியர் போன்ற தொழில்சார் அடைமொழிகளை என்பவற்றை சபை நடவடிகைகளில் இருந்து நீக்க வேண்டும்.
அவ்வாறு நீக்குவது எமது அரசியல் செயற்பாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கும். இது சமூக வேறுபட்டை காட்டுகிறது. பல்வேறு தொழில் துறை சார்ந்தவர்கள் இந்த சபையில் இருக்கிறார்கள்.
பேராசிரியர் என்பவர் பல்கலைகழகங்களுக்கு உரித்தானவர். வைத்தியர் வைத்தியசாலைக்குரியவர். எனவே, பாராளுமன்றத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் முகவரிபடுத்தும் போது பெயர்களுக்கு முன்னால் இருக்கும் தொழில்சார் அடைமொழிகளை நீக்குவது ஏற்புடையதாக இருக்கும் என்றார்.