Our Feeds


Tuesday, December 17, 2024

Zameera

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு முகாமைத்துவ அனுபவம் போதாது


 ‘‘தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு முகாமைத்துவ ரீதியான இயலாமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்காக தேர்தலுக்கு முன்னர் இவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்க முடியாது. இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் கூறியதைபோன்று, ஆட்சிக்கு வந்து 24 மணிநேரத்தில் மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. எனவே, வாக்குறுதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,


‘‘ஆட்சிக்கு வந்து 24 மணிநேரத்தில் ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குவோம் என்று கூறிய விடயங்களை இந்த அரசாங்கம் மறந்துவிட்டது போன்றே தெரிகிறது. அரிசி மோசடியை நிறைவுக்கு கொண்டுவர ஆட்சிப்பலத்தை தருமாறே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கோரியிருந்தது. ஆனால் தற்போது நாட்டில் அரிசிக்கான பிரச்சினை இருக்கின்றபோதும், மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது போன்று தெரியவில்லை.


வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எதற்கு என்று வினவியவர்கள் இன்று மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். புத்தாக்க அரசாங்கமொன்றை அமைப்பதற்கே இந்த அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது. ஆனால், இறுதியில் அரிசிக்கும் தேங்காய்க்கும் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.


இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 100 110 ரூபாவுக்கு விற்பனையான தேங்காய் இன்று 200 ரூபா வரையில் விற்பனையாகிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு மாதங்களில் குரங்குகளின் எண்ணிக்கை எவ்வாறு இலட்சக்கணக்காக அதிகரித்தது என்பதும் பிரச்சினைக்குரிய விடயமாகும். இந்த அரசாங்கத்துக்கு முகாமைத்துவ ரீதியான இயலாமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.


வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு கொண்டுவர போவதாகவே தேர்தல் காலத்தில் தொடர்ந்தும் கூறி வந்தார்கள். ஆனால், இன்று வெளிநாட்டில் பெற்றுக்கொண்ட பட்டப்படிப்புக்கான சான்றிதழைக் கூட நாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலைமை இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. மின் கட்டணம் முதற்கொண்டு மக்களின் அத்தியாவசிய சேவைகள் குறித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை ஏமாற்றமடைந்து வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன.


மின் கட்டணத்தில் நிவாரணம் கிடைக்குமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும் அந்த எதிர்பார்ப்பு கனவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி முன்னர் கூறியதுபோன்று எரிபொருளுக்கான வரிகுறைப்போ, மோசடி நிறைந்த எரிபொருள் விலை சூத்திரமோ இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை. அன்று இவர்கள் கூறிய மோசடி நிறைந்த எரிபொருள் விலை சூத்திரமும் வரி முறையும் இன்னும் ஏன் நடைமுறையில் இருக்கிறது என்பதற்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »