ரணில் வேலைத்திட்டங்களை மாற்ற முடியாது
என ஜனாதிபதி கூறிக்கொண்டிருக்க, அவரது சகாக்கள் நாம் மாற்றங்களை செய்துகொண்டிருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கின்றனர். அது உண்மை என்றால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா வலியுறுத்தினார்.சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அப்பால் தற்போதைய அரசாங்கத்தால் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் என்ன? அவற்றை அரசாங்கத்தால் கூற முடியாது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அரசாங்கம் பாடுபடுகிறது.
நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மாற்ற வேண்டியிருந்தது. ஆனால், அதற்கான நேரம் போதவில்லை. மீண்டும் பின்னோக்கிச் செல்ல முடியாது. எனவே அதே பாதையில் செல்கின்றோம் என பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்ட எந்தவொரு விடயத்தையும் இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது போயுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மாற்ற முடியாது என ஜனாதிபதி கூறிக்கொண்டிருக்க, அவரது சகாக்கள் நாம் மாற்றங்களை செய்துகொண்டிருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டிருக்கின்றனர். அது உண்மை என்றால் அதனை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். பிட்ச் ரேட்டிங் தரப்படுத்தலில் இலங்கை முன்னேறியதற்கு தாமே காரணம் என இவர்கள் மார்தட்டிக்கொள்கின்றனர்.
அரிசி பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் தீர்வினை வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டது. அரிசி ஆலை மாபியாக்களுக்கு பாடம் கற்பிக்க போவதாகக் குறிப்பிட்டனர். தற்போது சதொச விற்பனை நிலையத்திலாவது அரிசி இருக்கிறதா? அரிசியையும் தேங்காயையும் ஒன்றாக வழங்குவதாகக் கூறினார்கள். வழங்கினார்களா? இல்லை. அரிசி ஆலை மாபியாக்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.