கோப் குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்
கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் தரப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணங்கள் உள்ளன. நிறுவன கட்டமைப்புகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அரச நிர்வாகத்துடன் குறித்த நிறுவனங்களின் தகவல்கள் வரும். இதன்படி அதனை முறையாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் கட்சி வைத்திருக்க தீர்மானித்துள்ளது. இது அனைவரும் கலந்துரையாடி எடுத்த முடிவாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதன்கிழமை (18) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து விசேட உரையாற்றியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கி நாங்கள் அமைத்த சம்பிரதாயத்தை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
இதன்போது எழுந்து பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) தலைமைப் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். இந்நிலையில் கோபா குழுவினால் கடந்த காலங்களில் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரிக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். ஆகவே இந்த குழுவின் தலைவர் பதவி அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இதற்கமைய கோபாவின் தலைமைப் பதவி எதிர்கட்சியிடமும் கோப் குழுவின் தலைமைப் பதவி அரசாங்கத்திடமும் இருக்கும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , நளின் பண்டார முன்வைத்த யோசனை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் நாங்கள் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அதன்படி இந்த குழு தொடர்பில் ஆராய்ந்து குழுவின் தலைமைப் பதவி தொடர்பில் சாதகமான பதிலை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த காலங்களில் இந்த குழுக்களின் தலைமைப் பதவி ஒரு தடவை மாத்திரமே எதிர்க்கட்சியிடம் இருந்தது.
பல சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியிடமே இருந்தது. எங்களிடையே நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் உங்களின் கோரிக்கை இன்றியே கோபா குழுவின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் தரப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணங்கள் உள்ளன. நிறுவன கட்டமைப்புகளை விசாரிக்க வேண்டியுள்ளது. அரச நிர்வாகத்துடன் குறித்த நிறுவனங்களின் தகவல்கள் வரும். அதன்படி அதனை முறையாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் கோப் குழுவின் தலைமைப் பதவியை ஆளும் கட்சி வைத்திருக்க தீர்மானித்துள்ளது. இது அனைவரும் கலந்துரையாடி எடுத்த முடிவாகும் என்றார்.