Our Feeds


Wednesday, December 25, 2024

SHAHNI RAMEES

மஹிந்தவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல் என்பது முற்றிலும் பொய்யானது - தேவானந்த சுரவீர


ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மக்கள்

மத்தியில் அச்சமில்லாமல் செல்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்கு கோடி கணக்கில் அரசு செலவு செய்ய வேண்டிய தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.


 கொழும்பில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் வழங்கப்படுகின்றன சிறப்பு சலுகைகளை குறைப்போம் என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். நாட்டு மக்களும் இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். துறைசார் நிபுணத்துவ குழுவின் அறிக்கைக்கு அமையவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்பட்டு, போதுமான அளவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


 முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து மாத்திரம் தான் அதிகளவில் பேசப்படுகிறது.


மஹிந்த ராஜபக்ஷவின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், ட்ரோனர் கருவி ஊடான தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவங்களை நடத்தியவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் பற்றி பேசுவது ஒன்றும் ஆச்சிரியத்துக்குரியதல்ல.


 மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினர் அவர்களின் தென்னந்தோப்புக்களை பராமரிப்பதற்கும், வீட்டு நாய்களை பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதை மக்கள் அறிவார்கள்.


மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அவரை சார்ந்துள்ளவர்கள் அனுதாப அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். நாட்டு மக்கள் இந்த பொய்யை ஏற்றுக்கொள்ள போவதில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பிள்ளைகள் உள்ளார்கள். அவர்கள் அவர்களை பராமரித்துக் கொள்ள வேண்டும்.


ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கடந்த காலங்களை போன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் செல்லவில்லை.மக்களோடு மக்களாகவே செயற்படுகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாதுகாப்பையும், இன நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தியிருந்தால் ஓய்வுப் பெற்றதன் பின்னரும் ஓய்வுப் பெற்றதன் பின்னரும் இராணுவ பாதுகாப்பில் இருக்க வேண்டிய தேவை கிடையாது. பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுப் பெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பல கோடி ரூபாவை பாதுகாப்புக்காக செலவு செய்வது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »