Our Feeds


Friday, December 20, 2024

Sri Lanka

அரிசி இறக்குமதிக்கான காலவகாசம் நீடிப்பு!


அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (19) தெரிவித்தார்.

இதன்படி, அரிசி இறக்குமதியை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி ஏற்றுமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசம் இன்று (20) நள்ளிரவு 12 .00 மணியுடன் நிறைவடைகிறது.

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாவிட்டால், இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பை மீண்டும் ஏற்றுமதி செய்ய நேரிடும் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து நேற்று பிற்பகல் வரை தனியார் துறையினர் 35,600 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளனர்.

அந்த அரசி தொகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் , மேலும் 16,000 மெற்றிக் தொன் சிவப்பரிசியும் இருப்பதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தால் முன்பதிவு செய்யப்பட்ட 52,000 மெட்ரிக் தொன் அரிசி இருப்பு துறைமுகத்திற்கு வர உள்ளது.

மேலும், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் ஊடாக சதொச நிறுவனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட 10,400 மெற்றிக் தொன் அரிசி ஏற்கனவே சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »