Our Feeds


Wednesday, December 11, 2024

SHAHNI RAMEES

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன; இதனை மனித உரிமை மீறல் செயற்பாடாகவே கருத வேண்டும் - மனோ

 



பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை

அடிப்படை மனித உரிமை மீறலாக கருதி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சர்வஜன நீதி அமைப்பு நேற்று  செவ்வாய்க்கிழமை (10) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.


நாட்டின் சமூக கட்டமைப்பில் அடையாளப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுடன் தொடர்புடைய 10 விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 


பயங்கரவாத தடைச்சட்டம், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், உண்மை நல்லிணக்கம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கான நீதி, சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கான நீதி, தொழில் உரிமை, கலாசார மற்றும் மத சமவுரிமை, இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பலஸ்தீனம் விவகாரம் உள்ளிட்ட விடயங்களை முன்னிட்டு கலந்துரையாடப்பட்டன.


இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்துகொண்டிருந்தார்.


இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், 


மனித உரிமைகளுடன் தொடர்புடைய காரணிகளை அடையாளப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.


எமது மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனை மனித உரிமை மீறல் செயற்பாடாகவே கருத வேண்டும். 


ஆகவே, மனித உரிமையுடனான இந்த விடயதானங்களுக்குள் எமது மக்களின் அடிப்படை காணி மற்றும் வீட்டுரிமை விடயத்தையும் உள்ளடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இந்த கலந்துரையாடலை தொகுத்து வழங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முன்வைத்த பரிந்துரையை சிறந்தது என ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »