Our Feeds


Saturday, December 28, 2024

Sri Lanka

கறுவா ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்!


இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெட்ரிக் தொன்களாகும், இதில் சுமார் 19,000 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை தற்போது சுமார் 250 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்டி வருவதாக கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  ஜனக லிந்தர தெரிவித்தார்.

குறித்த வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, பாரம்பரியமாக கறுவா பயிரிடப்பட்டு வரும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கு மேலதிகமாக குருநாகல், புத்தளம் மற்றும் மகாவலி பிரதேசங்களில் கறுவாச் செய்கையை விரிவுபடுத்த கறுவா அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, கறுவா ஏற்றுமதி தொடர்பில் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனக லிந்தர தெரிவித்தார்.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீனாவுக்கு கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

இது தவிர ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு கறுவா ஏற்றுமதியை அதிகரிக்கவும் கறுவா அபிவிருத்தி திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும், இந்நாட்டில் பெரும்பாலான கறுவா   மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில் மேலும் அதை மதிப்பு சேர் பொருட்களாக ஏற்றுமதி செய்ய முடிந்தால், அந்நிய செலாவணியை எளிதாக இரட்டிப்பாக்க முடியும்.

இதன் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கறுவா வர்த்தகர்களை பெறுமதி சேர் பொருட்களுக்கு ஊக்குவிப்பதில் உதவ கறுவா அபிவிருத்தி திணைக்களம் எதிர்ப்பார்த்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »