Our Feeds


Saturday, December 21, 2024

SHAHNI RAMEES

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக தவறிழைக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

 




வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால்

இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அச்சம்பளம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் சம்பள நிர்ணய விதிகளுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனடிப்படையில் நோக்குகையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஹிமாலி அருணதிலகவினால் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அங்கு தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும், இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் தமக்கான வீட்டுப்பணியாட்களை இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லமுடியும் எனவும், அப்பணியாளர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தினால் வழங்கப்படுமே தவிர, குறித்த இராஜதந்திரியினால் வழங்கப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார்.


அத்தோடு மேற்குறிப்பிட்டவாறு அரசாங்கத்தினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சம்பள அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில் அது மிகக்குறைவான தொகையாக இருக்கக்கூடும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


'எனவே இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுடன் தொடர்புடைய பிரச்சினை இதனடிப்படையிலேயே தோற்றம் பெற்றிருக்கிறது. மாறாக அவர் அரசாங்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை பணியாளுக்கு வழங்காமல் இருக்கவில்லை. உண்மையில் இது நாட்டின் கொள்கை சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் அவர் தனிப்பட்ட ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.


மேலும் இந்த சம்பள நிர்ணய விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகத் தற்போது பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலக, 2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியபோது அவரது கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன என்பவருக்கு உரியவாறு ஊதியத்தைச் செலுத்தவில்லை என்றும், ஆகையினால் அவர் பிரியங்காவுக்கு 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


அதனைத்தொடர்ந்து அண்மையில் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட இறுதி சமர்ப்பணத்தை அடுத்து, இராஜதந்திரிகள் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலும், இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற செயன்முறையில் ஹிமாலி அருணதிலக உரியவாறு பங்கேற்காததன் காரணமாகவும் அவர் மேலும் 117,000 டொலரை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்தவேண்டும் என அந்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தமை குறிப்பித்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »