மருந்து இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீடு செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த ஒருசில இடையூறுகள் காரணமாக, எதிர்வரும் நாட்களில் இடைக்கிடை ஓரிரு மருந்துகளுக்கு தற்காலிக தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவ்வாறு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக வுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சோடியம் பைகார்ப னேட்டு தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதுடன் அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான சோடியம் பைகார்பனேட்டு நாட்டில் இருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் அறிவித் தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மருந்துத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சூழ்நிலை கள் உருவாகியிருந்தன. கடந்த வருடத்தில் தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய வர்த்தகர்களுக்கு இடையில் முன்னெ டுக்கப்படவேண்டிய கொள்முதல் செயற்பாடுகளில் குறைபாடு இருந்தது. அதில் கால தாமதமும் ஏற்பட்டிருந்தது. இந்த வருடம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கூட இந்த கொள் முதல் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண் டும்.
இந்நிலையில், கடந்த அமைச்சரவையில் 350 வகையான மருந்துகளுக்காக 50 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, திரும்பப்பெறும் உத்தரவாதத்தின் அடிப்படையிலும் அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் மருந்து உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சினால் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒழுங்கின்மையின் காரணமாக மருந்து இறக்குமதி செய்வதற்கான ஒதுக்கீடு செயற்பாடுகளுக்கும் ஒருசில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன. அதே போன்று, இதிலொரு அங்கமாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் மருந்துகள் தொடர்பான நிறுவனங்களை பதிவு செய்வதில் பாரதூரமான சிக்கல்கள் இருந்தன.
அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறே எதிர்வரும் நாட்களில் இடைக்கிடை ஓரிரு மருந்துகளுக்கு தற்காலிக தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அதுதொடர்பில விரைந்து நடவடிக்கை எடுப்போம்.
கடந்த சில மாதங்களில் சோடியம் பைகார்பனேட் டுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. சோடியம் பைகார்பனேட் தட்டுப்பாட்டினால் மாவனெல்லை வைத்தியசாலையில் மரணமொன்றும் சம்பவித்தி ருந்ததாக கூறப்பட்டிருந்தது. அது பொய்யான கருத்தாகும். அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
சோடியம் பைகார்பனேட்டு பிரச்சினைக்குத் தீர்வை கண்டுள்ளோம். எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு தேவையான சோடியம் பைகார்பனேட்டு நாட்டில் இருப்பில் இருக்கிறது. விநியோகஸ்தருக்கு வழங்கப்பட்டிருந்த விலைமனு கோரலுக்கமைய அவரினால் போதிய தொகையில், சரியான நேரத்தில் இன்சுலின் விநியோகிக்காமையின் காரணமாகவே இன்சுலினுக்கு தட்டுப்பாடு இருந்தது.
தேசிய வைத்தியசாலையிலேயே இந்த சிக்கல் இருக்கிறது. அதற்கும் தீர்வை பெற்றுக்கொடுப் பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், 500 600 வரையான மருந்துகளுக்கான தட்டுப்பாடோ அல்லது தரம் குறைவான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் முழுமையாக போலியானவையாகும்.
இதேவேளை, அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு கையிருப்பில் இருக்கும் அரிசி தொகையை சந்தைக்கு விநியோகிக்குமாறு பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால், அந்த செயற்பாடுகள் முறையாக இடம்பெற்றிருக்க வில்லை. அதற்கமையவே, ஒருசில நடவடிக்கை களை முன்னெடுக்க நேர்ந்திருந்தது. மிக விரைவில் அரிசி இறக்குமதி செய்யப்படும்.
விளைச்சலினால் கிடைக்கப்பெறும் அரிசியும் சந்தைக்கு கிடைக்கும் என்பதால் ஒருதொகை அரிசியை அரசாங்கத்தின் இருப்பில் வைத்துகொண்டு மிகுதியை சந்தைக்கு விநியோகிக்கத் தீர்மானித்திருந்தோம். எதிர்வரும் நாட்களில் தனியார் துறையினரையும் இணைத்துக்கொண்டு அரிசி விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடியதாக இருக்குமென்று நம்புகிறோம். அரசின் இருப்பில் ஒருதொகை அரிசியை வைத்துக்கொள்ளவும் சரியான தரவுத் தளத்தை பேணவும் உற்பத்தி முதல் விற்பனை வரையிலான செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
நா.தினுஷா