Our Feeds


Tuesday, December 31, 2024

Zameera

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

புதுவருடத்தை முன்னிட்டு காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் ஏற்படக் கூடிய வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட போக்குவரத்து ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன்படி புறக்கோட்டை, கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய காவல்துறை பிரிவுகளை அண்மித்த வீதிகளில் இந்த போக்குவரத்து ஒழுங்குகள் அமல்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் இன்றையதினம் காலி முகத்திடலில் உள்ள வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலாகக் கட்டணத்துடன் கூடிய தனியார் வாகன நிறுத்துமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வளாக வாகனத் தரிப்பிடம், கோட்டை – விமலதர்மசூரிய மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் – சார்மன்ஸ் வாகனத் தரிப்பிடம், ராசிக் ஃபரீத் மாவத்தை – ஹேமாஸ் வாகனத் தரிப்பிடம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை – லேக் ஹவுஸ் வாகனத் தரிப்பிடம், கொம்பனித்தெரு – யூனியன் பிரதேசம் டோசன் வீதி சந்தி, எக்சஸ் வாகனத் தரிப்பிடம், மருதானை – காமினி சுற்று வட்டத்திற்கு அருகில் புனித கிளெமென்ட் வாகனத் தரிப்பிடம் என்பன கட்டணத்துடன் கூடிய தனியார் வாகன நிறுத்துமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கட்டணமின்றிய வாகனத் தரிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோட்டை காவல்துறைக்கு உட்பட்ட பால தக்ஷா மாவத்தை வாகனத் தரிப்பிடம், கொள்ளுப்பிட்டி காவல்துறைக்கு உட்பட்ட கரையோர வீதி, கோட்டை மற்றும் மருதானை காவல்துறைக்கு உட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொம்பனித்தெரு காவல் துறைக்கு உட்பட்ட பார்சன்ஸ் வீதி வெளியேறும் பாதை மட்டும், கோட்டை காவல்துறைக்கு உட்பட்ட லேடின் பெஸ்டியன் மாவத்தை, பிரிஸ்டல் வீதி, டியூக் வீதி.

காலி வீதி வெள்ளவத்தை சவோய் அருகிலிருந்து காலி வீதி பகத்தலே வீதி சந்தி வரை வாகன நிறுத்துமிடங்களில் மட்டும், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை தாமரை தடாகம் சுற்று வட்டத்திலிருந்து கறுவாத்தோட்டம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நூலகச் சுற்று வட்டத்தை நோக்கி நுழைவதற்கான பாதை, கறுவாத்தோட்டம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, ரீட் மாவத்தை சந்தியிலிருந்து ரீட் மாவத்தை, தர்ஸ்டன் சந்தி வரையான வீதியின் வலது பக்கம், சுதந்திர வீதி, சுதந்திர சுற்று வட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையான வீதியின் வலது பக்கம், மெட்லண்ட் இடம், மன்றக் கல்லூரி வீதி என்பன கட்டணமின்றிய வாகனத் தரிப்பிடங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் போது கொழும்பில் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும், பிரதான வீதியை மறித்து வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »