சர்வதேசத்துடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு
வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் நாட்டின் தேவையை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும்.மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளித்து வெளிப்படை தன்மையுடன் எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பில் நாட்டின் தேவையை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
அவ்வாறு எந்தவொரு தீர்மானங்கள் தொடர்பிலும் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயார். எட்கா மாத்திரமின்றி ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.
நாட்டின் சமகால தேவை என்ன? மற்றும் மக்களின் அபிலாஷைகள் என்பவற்றுக்கே முன்னுரிமையளிக்கப்படும். எவ்வாறிருப்பினும் வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் ஒரு சில அரசியல் குழுக்கள் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
ஏதேனுமொரு வகையில் நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய வேண்டும் என்பதே அவர்களது தேவையாகவுள்ளது.
மாறாக அவர்களுக்கு நாடு தொடர்பில் எவ்வித பிரச்சினையுமில்லை. அவர்களது தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காவே செயற்படுகின்றனர்.
எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தம் தொடர்பிலும் மக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் எட்கா ஒப்பந்தம் தற்போதும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளது. அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.