Our Feeds


Saturday, December 21, 2024

SHAHNI RAMEES

அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

 

சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று  வெள்ளிக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். 

நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வெறுமனே பேசக் கூடாது. நாட்டில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடுத்த ஆண்டு முதல் வட்டியில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.

பிற வெளிநாட்டு கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளன. இதை அடைவதற்காக நமது நாட்டின் அந்நிய செலாவனி கையிருப்புக்களை உயர் மட்டத்தில் வெற்றிகரமாக பேண வேண்டும்.

இதன் பொருட்டு, சுற்றுலாத் துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது. 

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அதேவேளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சமச்சீரான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக மதுபானசாலை உரிமைப் பத்திரங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டன. 

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு, அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையையும் மேற்கொள்வுமே இவை வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி நல்லொழுக்கமுள்ள நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

முறையான கொள்கை உருவாக்கத்துடன், கட்டளைச் சட்டங்கள் மற்றும் வரைவுச் சட்டங்கள் மூலம் மது இல்லாத சிந்தனை மற்றும் கருத்து உருவாக்கப்பட வேண்டும். 

அதன் மூலம் அவை செயல்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டு, கண்காணிக்கப்படவும் வேண்டும். இந்த இலக்குகளை நிறைவு செய்யும் செயற்பாட்டை வெற்றியடையச் செய்வதன் மூலம் அனைவரது அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியும் என்றார்.   


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »