Our Feeds


Wednesday, December 11, 2024

SHAHNI RAMEES

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் - ரவிகரன்

 


இந்த நாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கண்டுகொள்ளாத நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். 


சர்வதேச மனித உரிமை நாளான டிசெம்பர் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமாக்கப்பட்ட   உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   


அதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் அவரின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். 


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மிக நீண்ட நாட்களாக இந்த வீதிகளில் இறங்கி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


தங்களுடைய உறவுகளை வட்டுவாகல் பகுதியிலும் ஓமந்தையிலும் முகாம்களிலும் இன்னும் பல இடங்களிலும் கைதுசெய்த  இராணுவத்தினர், கைதுசெய்தவர்களை திருப்பி ஒப்படைக்கவில்லை. 


அத்தோடு கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே எனவும் இராணுவத்தினர் சொல்லவில்லை. 


இந்நிலையில் வட, கிழக்கில் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தொடர் போராட்டத்துடன், கண்ணீரோடு தமது நாட்களை நகர்த்தி வருகின்றனர். 


இவர்களை மாறி மாறி வரும் அரசாங்கங்களும் கண்டுகொள்ளாத நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது. 


இந்நிலையில் கடந்த 04ஆம் திகதி தமிழ் அரசு கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திக்கும்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாகவும் அவரிடம் பேசினோம். 


அவர் இந்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதாகவும், கூடிய விரைவில் இதற்கான ஒரு வழியை ஏற்படுத்தித் தருவதாகவும் தெரிவித்திருந்தார். 


அந்த வகையில் இந்த ஜனாதிபதியினுடைய ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கவேண்டும். 


குறிப்பாக இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி கண்ணீரோடு இந்த வீதிகளில் தொடர் போராட்டத்நில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள் பலர் இறந்துபோன அவலங்களும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருக்கு முன்னைய மகிந்த அரசாங்கமானது பதில் சொல்லியே ஆகவேண்டும். 


தற்போது இந்த நாட்டைப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கம் பலத்த பெரும்பாண்மை பலத்தோடு  இருக்கின்றனர். 


இந்த அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும் இந்த நாட்டில் ஒருகாலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் எமது போராட்ட வலியையும் அவர்களும் உணர்வார்கள் என நம்புகின்றோம். 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீள ஒப்படையுங்கள் அல்லது அதற்கான பதிலைச் சொல்லுங்கள் என்றுதான் நாம் கேட்கின்றோம். 


இந்த உறவுகள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு உறவுகளைத் தேடி அலைவது!


இந்த உறவுகளுக்கான தீர்வினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கவேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »