Our Feeds


Friday, December 20, 2024

Sri Lanka

ஐவரின் மரண தண்டனையை உறுதி செய்தது மேல்நீதிமன்றம்!

தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்காக குறித்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே பிரதிவாதிகளுக்கு அறிவித்தார்.

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் திகதியை உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டினார்.

குற்றவாளிகள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்பார்க்கும் பட்சத்தில் தண்டனையை நிறைவேற்றும் திகதி அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதற்கமைய தண்டனையை நிறைவேற்றும் திகதி தொடர்பில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் மட்டுமே முடிவெடுக்க முடியும் எனவும் இது தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »