Our Feeds


Wednesday, December 11, 2024

Zameera

அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - ஹரிணி அமரசூரிய


 பாடசாலை மாணவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் என்ற வகையில் பொதுமக்களுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மூலோபாயங்களை வகுத்தல்” என்ற தலைப்பில் கொழும்பு இலங்கை மன்றத்தில் இன்று (11) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சிறுபராய அபிவிருத்தி தொடக்கம் உயர்கல்வி, தொழிற்கல்வி வரையிலான கல்வி நிலைகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த தேவையான பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
கல்வி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அறிவைப் பெறுவதற்கு அப்பால், தனிப்பட்ட மற்றும் ஒரு கூட்டு மாற்றமாக ஒரு சமூக மாற்றம் நிகழ வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கல்விமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும்.

அதன் மூலம் உலகை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை பிள்ளைகள் பார்க்க முடியுமாக இருக்க வேண்டும். சமூகப் பொறுப்பை உணர வேண்டும். தனிப்பட்ட ரீதியில் மட்டுமன்றி, ஒரு சமூகமாகவும் எழுச்சிபெற வேண்டும். அதற்கான சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும். அதன் மூலம் அறிவையும் திறமையையும் பெற வேண்டும்.

கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் அல்ல. நாம் கல்வியை ஒரு வர்த்தக பண்டமாக மாற்றியுள்ளோம். இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும்.
நாம் ஓரிரு வாரங்களில் முடிவுகளை எதிர்பார்த்து கல்வியில் முதலீடுகளை செய்யவில்லை. இது ஒரு நீண்ட கால முதலீடாகும், அந்த முதலீட்டை அரசாங்கம் செய்யும்.

கல்வி அமைச்சும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் இடமாக மாற வேண்டும். அந்தக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஊகங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது. தரவைச் சேகரிக்கவும் அதனை பேணவும் எங்களுக்கு ஒரு முறைமை தேவை.

அதிகாரிகளிடம் கருணை இருக்க வேண்டும். சேவையை எதிர்பார்த்து வருபவர்கள் அழுதுகொண்டு செல்வதைப் பார்க்கிறோம். அதிகாரிகள் அவர்களுக்கு செவிசாய்ப்பதில்லை, சரியாக பேசுவதில்லை, கேள்வி கேட்டால் பதில் சொல்வதில்லை.

ஒரு விடயத்தை பல ஆண்டுகளாக இழுத்தடிப்புச் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த முறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »