இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் 'இருதரப்ப-கூட்டுவெற்றி' என்ற கோட்பாட்டுடன் அனைத்து நாடுகளுடன் உறவுகளை பேணவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
டில்லியில் உள்ள இந்தியன் பவுண்டேசனில் ஒழுங்கப்பட்ட நிகழ்வென்றில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு நாங்கள் ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும், அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வட கொரியா போன்ற பிற நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவே விரும்புகின்றோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை மேற்கோள்காண்பித்து வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவிற்கான ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் விஜயத்துக்குப் பிறகு, அவரது அடுத்த பயணம் அடுத்த மாதம் சீனாவுக்காகும். திசாநாயக்க இந்திய வருகையை முதலில் முன்னுரிமைப்படுத்தியிருந்தாலும், எமது அரசாங்கம் டில்லி மற்றும் பீஜிங் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்கின்றது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதர் கீ சென்கொங், இலங்கைக்கு அருகில் உள்ள அண்டை நாடு என்பதால் திசாநாயக்கவின் இந்தியா விஜயத்தை சீனா வரவேற்றுள்ளது. திசாநாயக்கவின் பீஜிங் பயணம் 'சீனா - இலங்கை'யின் பாரம்பரிய நட்பை மேம்படுத்தும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்பதோடு அது எமது மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதாக இருக்கும் என்றுள்ளது.
சுற்றுலாத்துறை
சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் அமைச்சர் ஹேரத், 2018 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தை எட்டிய பின்னர் தொடர்ச்சியாக பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
2019இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 2020-2021 இல் கொரோனா தொற்றுநோய் மற்றும் 2022இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை ஆகியவை காரணமாக அமைகின்றது.
இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக்கும் வர்த்தமானி அறிவிப்பை திசாநாயக்க அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு இந்தியா பிரதிபலிப்பு செய்ய வேண்டும். இரு நாடுகளிலும் சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும் என்றார்.
ஆராய்ச்சிக்கப்பல்கள்
அத்துடன், இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள், குறிப்பாக சீனக் கப்பல்கள், உட்பட அனைத்து ஆராய்ச்சி கப்பல் பயணங்களுக்கும் இலங்கையால் விதிக்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 31 அன்று காலாவதியான பிறகும், இலங்கை துறைமுகங்கள் வருகை தருவதற்கும் நிறுத்துவதற்கும் அனுமதிக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டபோது, இந்த விவகாரத்தில் ஒரு 'தேசியக் கொள்கையை' உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அகதிகள் விடயம்
இதேநேரம், குறித்த நிகழ்வின் பின்னர் 'தி இந்து நாளிதழ் ஊடகவியலாளரிடம் உரையாடிய அமைச்சர் ஹேரத், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் 'பரிசீலனை செய்யும்' என்று கூறினார்.
1980களில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பல அகதிகள், இந்தியாவில் குடியுரிமை பெறத்தகுதியற்றவர்கள், இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்கள்.
அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவை தளமாகக்கொண்ட ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர், அதேநேரத்தில் சுமார் 34,000பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது