Our Feeds


Wednesday, December 25, 2024

Zameera

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு


 நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் நிலவிய சீரற்ற வானிலையால் பல மாவட்டங்களில் விவசாயம் பாரியளவில் பாதிக்கப்பட்டது.  இதனால் விவசாயிகள் உட்பட பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.


விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய கடந்த 2ஆம் திகதி நிலைவரப்படி, சுமார் 91 300 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாகவும், 86 225 ஏக்கர் நெற்பயிர்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  மேலும் 173 சிறு நீர்பாசன வாய்க்கால்கள் முழுமையாகவும், 1148 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  


அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 750 ஏக்கர் மரக்கறி பயிர்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், சேதமடைந்த பயிர் செய்கைக்கான விதைகளை உள்ளிட்டவற்றை விவசாயத்திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  


அத்தோடு தற்போதுள்ள பயிர் செய்கை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெற் பயிர் செய்கைக்காக அதிகபட்சமாக 2 ஹெக்டயார் வரை (5 ஏக்கர்) அதிகபட்சமாக 40 000 ரூபா இழப்பீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் சோயா உள்ளிட்ட 5 பயிர் செய்கைகளுக்காக அதிகபட்சமாக ஒரு ஹெக்டயாருக்கு 40 000 ரூபா இழப்பீட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


2025ஆம் ஆண்டுக்கான விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான காப்பீட்டு சபைக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் இவற்றை வழங்குவதற்காக விவசாயத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »