கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தித் தமது தீர்மானத்தினை அவர் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.
அண்மையில் கட்சியில் இணைந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு நீதி வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து தாம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பட்டியல் உறுப்பினர் தெரிவின்போது, கடந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இணைத்துக்கொள்ளப்படவில்லை.
அவர்களுக்குத் தேவையானவர்களை மாத்திரம் தெரிவுசெய்வதற்கு முயற்சிக்கின்றமை இதன்மூலம் தெளிவாகின்றது.
அவ்வாறானதொரு கட்சியிலிருந்து நாட்டுக்கும் பொது மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்ற முடியாது.
பொதுத் தேர்தல் நிறைவடைந்து கடந்த ஒருமாத காலமாக அவர்கள் முன்னெடுக்கும் விடயங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்.
குறைந்தபட்சம் மனிதாபிமானத்துடன் செயற்படுவதைக் கூட அவதானிக்க முடியவில்லை.
ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி எதிர்வரும் காலங்களில் தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.