Our Feeds


Monday, December 9, 2024

SHAHNI RAMEES

ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரிய ஜனாதிபதி அஸாத்!

 


'கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை

காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.


மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதியாக இருந்தவர் பஷர் அல் அஸாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் அஸாத் ஜனாதிபதியாக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற அஸாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள் இணைந்தன.


இந்நிலையில், அல் - குவைதா அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் திகதி தீவிர தாக்குதலை துவங்கின. அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.


இதைத் தொடர்ந்து, டாரா, குனேத்ரா, சுவேடா ஆகிய நகரங்களையும் கைப்பற்றின. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை, கிளர்ச்சி படைகள் நேற்று கைப்பற்றின. தலைநகரை கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த ஜனாதிபதி அஸாத், விமானம் மூலம் தப்பிச் சென்றார்.


 

தஞ்சம் எங்கே?


இதையடுத்து, நாட்டின் நிர்வாகம் தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக கிளர்ச்சிப் படைகள் தெரிவித்தன. ஆனால் ஆசாத் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் மர்மமாக இருந்தது.


தற்போது, அதற்கு விடை கிடைத்துள்ளது. ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தப்பியோடிய அஸாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யா, மொஸ்கோவில் தஞ்சம் புகுந்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரண்மனை


இதற்கிடையே, அஸாத் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றதால், சிரியா கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் அரண்மனைகளைக் கைப்பற்றினர். 50 ஆண்டுகாலமாக தந்தை, மகன் என ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அஸாத் குடும்பத்தின் அரண்மனைக்குள் கிளர்ச்சியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அஸாத் மற்றும் அவரது தந்தை புகைப்படத்தை அகற்றினர். அரண்மனையில் கிளர்ச்சியாளர்கள் உலா வரும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »