Our Feeds


Sunday, December 29, 2024

Zameera

சுங்கத் திணைக்கள மோசடிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை


 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு- குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் தலைமையதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 
போதைப்பொருள்,சட்டவிரோத பொருள்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல், மோசடிகளை மட்டுப்படுத்தல், சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
அதற்காக, குடிவரவு - குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம்,விமான நிலையம்,விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு,கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
 
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுங்கம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »