Our Feeds


Monday, November 18, 2024

SHAHNI RAMEES

முஸ்லிம் உடன்பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி! - மனோ OpenTalk



தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும்

மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி  அமைக்கும் அநுர குமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது. இதையிட்டு நான் மன வருத்தம் அடைகிறேன்.


எனினும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாகவும் அதிகரித்து கொண்ட, சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் உடன்பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என  மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


தமுகூ தலைவர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது;   


அடித்துள்ள அரசியல் அலையின் மத்தியிலும் நாடெங்கும் மக்கள், எமது வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களில் 237,123 விருப்பு வாக்குகளை எமது வாக்காளர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள்.  அவர்களுக்கு விசேட நன்றிகள்.


பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது  பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக உரிமை  செயற்பாடுகளாகும். ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்திய படவில்லை. இதை கண்டு மன வருத்தம் அடைகிறேன்.


2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு வெற்றி அடையாத சூழலை நான் எதிர் கொண்டேன். பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு. ஆனால், அப்படி போராடி பெற்ற கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவமும் இன்று இல்லாமல் போயுள்ளது. அதையிட்டும் நான் கவலை அடைகிறேன்.


நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக கொழும்பு மாவட்ட புதிய வேட்பாளர் தம்பி லோஷன் ரகுபதி பாலஸ்ரீதரன் புதிய அனுபவங்கள் பலவற்றை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள். அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும்.


கடும் அரசியல் அலையின் மத்தியில், தமிழ் வாக்காளர் சிறுபான்மையாக வாழும் ஏனைய இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.


கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்.


எமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கடுமையாக உழைத்த கட்சி பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »