10ஆவது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார அரச கொள்கைப் பிரகடன உரையில் நாட்டின் அபிவிருத்தி, நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையை இல்லாதொழிப்பது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது போன்ற பல்வேறு திட்டங்களை முன்வைத்ததுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டியிருந்தார்.
எனவே நாட்டினை கட்டியெழுப்பும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக் தயார் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
தனது முதலாவது பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துவிட்டு நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தமைக்காக கட்சியின் தலைமை, கட்சி மத்திய குழு, மாவட்ட மத்திய குழு, சக வேட்பாளர்கள் மற்றும் எனக்கு வாக்களித்த அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
கடந்த காலங்களிலும் நீங்கள் வழங்கிய பதவிகளை நியாயமாக, நேர்மையாக செய்தவன் என்ற வகையில் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் நேர்மையாகவும் நியாயமாகவும் மக்கள் விரும்புகின்ற வகையில் செயற்படுவதுன் அபிவிருத்தி மற்றும் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், கட்சியின் வளர்ச்சியின் அதிக கவனம் செலுத்துவதுடன் கட்சிக்காக முழுமையாக பங்காற்ற இருப்பதாகவும் திகாமடுல்ல மாவட்டத்தின் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்புரிமையை இரண்டாக அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.