Our Feeds


Monday, November 11, 2024

SHAHNI RAMEES

"L" போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். - ரணில்

 


தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால்

நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்  என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில்,


நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அனைத்து கடன்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டாேம். 2028ஆம்போது நாங்கள் கடனை செலுத்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 2042வரை காலம் இருக்கிறது. கடன் செலுத்தவில்லை என்றால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டிவரும்.


ஜனாதிபதி இதுவரை பொருளாதார இலக்கு தொடர்பில் தெரிவிக்கவில்லை. அதனால் பாரிய நிச்சியமற்ற நிலை இருந்துவருகிறது. தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு, தேங்காயின் விலை தேங்காய் மரத்தைவிட உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை தாமரைக்கோபுரம் போன்று உயர்ந்து செல்கிறது. முட்டை விலை அதிகரித்து செல்கிறது. இதற்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியுமா?


இந்த அரசாங்கம் நாணய நிதியத்துடன்  எவ்வாறு கலந்துரையாடுகிறது? ஜனாதிபதி தேர்தலில் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கையை கொண்டுவந்தார்கள். அவற்றை செயற்படுத்த முடியுமா? வரி நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்தார். அவை கிடைக்கிறதா இல்லையா? என தெரிவிக்க வேண்டும்.


நாடு முன்னுக்கு செல்வதாக இருந்தால் நூற்றுக்கு 8வீத வருடாந்த பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? சிறிலங்கன் விமான சேவையை வைத்துக்கொள்வதா எனதெரிவிக்க வேண்டும். திசைகாட்டி முன்வைத்திருக்கும் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது.


மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு அமைய அரசாங்கத்தை நிர்வகிக்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியில் வியத்மக வைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதி போட்டாபயவை இல்லாமலாக்கினார்கள். இவர்களையும் இல்லாமலாக்க அவர்கள் தற்போது திசைகாட்டியில்  போட்டியிடுகின்றனர்.


நாட்டுக்கு திறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும். நான் எப்போதும்  பொருளாதாரத்தை திறந்து விட்டிருந்தேன். திசைகாட்டியில் இருக்கும்  திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாங்கள் அறிமுகப்படுத்திய பயணத்தில் செல்லுங்கள். இந்த பயணத்தில் இருந்து தூரமாக வேண்டாம். அவ்வாறு இடம்பெற்றால் இந்த பொருளாதாரத்தை கையாள முடியாது.


மேலும் உதய செனவிரத்ன அறிக்கையை செயற்படுத்த, திசைகாட்டி அரச ஊழியர்கள் ஏன் எதிர்ப்பு? இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். திசைகாட்டியின் பொருளாதார சபையில் வேலை செய்ய முடியாது. அந்த சபையில் வணிகக் கல்வி தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். வியாபார முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருத மொழி தெரிந்தவர்களும் இருக்கிறார்களாம். என்றாலும் பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு என்ன தெரியும்.?


இது அறியாதவர்கள் இருக்கின்ற அனுபவமில்லாத  அரசாங்கமாகும். ஜனாதிபதி முதல் யாருக்கும் அனுபவமில்லை. அவர்களின்  வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா? மறைந்திருக்கும் வேட்பாளரை கண்டுபிடித்து உறுப்பினராக்குமாறு தெரிவிக்கிறார்கள். அதனால் அனுபமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதா?


அதனால் தற்போது இருப்பது எல்போட் அரசாங்கம். எல்போட் அரசாங்கமும் எல்போட் பாராளுமன்றமும் இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாடு சீரழிந்துவிடும். எனவே நாங்கள் எல்போட் அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதா? பாராளுமன்றத்தை  சிலிண்டருக்கு கொடுத்தால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும். அதனை நாங்கள் நடைமுறையில் காட்டி இருக்கிறோம். பொருளாதாரத்தை பாதுகாக்க சிலிண்டரில் போட்டியிடுபவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். குப்பைகளை அகற்றுவதற்கு திசைகாட்டியை அபான்சுக்கு அனுப்புங்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »