நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காக 2000 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியை கண்காணிப்பதற்காக கஃபே அமைப்பின் மூலம் 26 மாவட்ட இணைப்பாளர்களும்,அதேபோன்று 160 நீண்டகால கண்காணிப்பாளர்களையும் பணிக்கு அமர்த்த அதன் ஊடாக தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியை கண்காணித்தோம். அதேபோன்று தேர்தல் பிரசார நிதியை கண்காணிப்பதற்காக 3 மாவட்டங்களில் (யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம்) 23 நீண்டகால கண்காணிப்பாளர்களை நிறுவி அதன் ஊடாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அதேபோன்று அரசியல் கட்சிகளின் அபேட்சகர்கள் செலவு செய்கின்ற விடயங்களை கண்காணிப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்ததாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மானஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் இதுவரையான காலப்பகுதிக்குள் 847 முறைப்பாடுகள் கஃபே அமைப்பில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகியுள்ள முறைப்பாடுகளின் பெரும்பாலானவை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில்தான் பதிவாகியிருக்கின்றது.
இதேநேரம் வன்முறைகள் தொடர்பாகவும் சில முறைப்பாடுகள் கஃபே அமைப்புக்கு தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் பதிவாகியிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதி மிகவும் ஒரு சுமூகமான சமாதானமான காலமாக காணப்பட்டாலும் இம்முறை பொதுத் தேர்தலில் சில பிரதேசங்களில் வன்முறைகள் இடம்பெற்று இருப்பதனை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
இம்முறை நடைப்பெறவிருக்கின்ற தேர்தலினை வன்முறையற்ற ஒரு சமாதானமான தேர்தலாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கஃபே அமைப்பு அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் அதேபோன்று அரசியல் கட்சி அபேட்சகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.