Our Feeds


Friday, November 29, 2024

SHAHNI RAMEES

பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது - அலி சப்ரி

 



இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக்

கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.


மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.


இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது,


நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். 


அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும்.


 இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. 


வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும்.


அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம்.


அதேவேளை , பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »